விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழக விவசாயிகள் தங்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளின் உச்சகட்ட வேதனையும், விரக்தியும்தான் அவர்களை இன்றைய சம்பவத்திற்கான சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது வேதனைக்குரியது, வருத்தத்துக்குரியது.
நமது விவசாயிகள் இத்தகைய நிலைக்கு ஆளாக வேண்டாம், அவசியம் இல்லை. காரணம் விவசாயிகளுடைய எண்ணங்களை பிரதிபலித்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல், நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் அதை முறையாக, சரியாக எடுத்துக்கூறலாம்.
ஆனால் பார்க்காத பிரதமரை பார்க்க வைக்கின்றோம் என்றும் இல்லாத பிரதமரை இருக்கின்றார் என்றும் பொய் சொல்லி, வாடுகின்ற விவசாயிகளை ஏமாற்ற வேண்டிய அவசியம் காவல்துறைக்கு கிடையாது. இது யார் செய்த சதி என்று தெரிய வேண்டும்.
தமிழக முதல்வர் இன்னும் டெல்லியில் போராடிக்கொண்டிருக்கின்ற தமிழக விவசாயிகளை பார்க்கவில்லை என்பது மாநில அரசு விவசாயிகள் நலன் சார்ந்த அரசாக செயல்படவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.
இனியும் கால தாமதம் செய்யாமல் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு என்பதால் உடனடியாக விவசாயிகளின் அனைத்து விதமான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு நம்பிக்கை கொடுக்க கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.
