மார்ச் 8-இல் கூட்டணி குறித்த அறிவிப்பு:ஜி.கே. வாசன்

மகளிர் தினத்தையொட்டி, தமாகா சார்பில் மார்ச் 8-இல் நடைபெறும் மகளிர் மாநாட்டில் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்தக் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் மகளிர் அணி மாவட்டத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பின்னர், வாசன் நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:

மகளிர் மாநாடு நடத்தும் இடம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

திமுக, தேமுதிகவுடன் பா.ஜனதா கூட்டணி சேர வாய்ப்பு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி கூறி இருப்பது தேர்தல் யுக்தியாக கூட இருக்கலாம். இந்தக் கருத்து பற்றி அவரது கட்சி தலைவர்கள்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

கெயில் நிறுவன விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு மாற்று வழியில் குழாய்களை பதிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றுக்கு வரிச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால் அவற்றின் விலை உயரும் ஆபத்து உள்ளது. எனவே இந்த வரிச் சலுகையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்.

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் இலங்கை பயணத்தின் போது தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்றார்.

“தேசியத் தலைவர்தான் ராகுல்’

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு, தேர்தலில் வெற்றி பெற்றால் துணைத் தலைவர் ராகுல் காந்தியை முதல்வராக்குவோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருந்தார்.

இதுகுறித்து ஜி.கே.வாசனிடம் நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த அவர், “ராகுல் காந்தியை எப்போதும் தேசியத் தலைவராகவே பார்க்கிறேன்’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *