எச்.ஐ.வி., புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும் ஜி.கே.வாசன் வேண்டுகோள்

சென்னை,

‘‘எச்.ஐ.வி., புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிக்க வேண்டும்’’, என்று ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகளிரணி கூட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மகளிரணியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மகளிரணி தலைவி மகேசுவரி தலைமை தாங்கினார். மூத்த தலைவர்கள், மாநில–மாவட்ட நிர்வாகிகள் பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு மகளிரணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். சட்டமன்ற தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும் அவர் விவாதித்தார். இதனைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

உயிர் காக்கும் மருந்துகளை…

மத்திய அரசு உயிர்காக்கும் 76 வகை மருந்துகளுக்கு இறக்குமதிக்கான வரிச்சலுகையை ரத்து செய்திருப்பதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இதனால் மருந்துகள் விலை உயர்ந்து நோயாளிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். இந்தியாவில் அதிக அளவில் மருந்து பொருட்கள் தயாரிக்கப்பட்டாலும் எச்.ஐ.வி., புற்றுநோய் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அதிக ரத்தக்கசிவு போன்ற பல்வேறு நோய்களுக்கான உயிர்காக்கும் மருந்துகள் பல்வேறு நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே உயிர்காக்கும் மருந்துகளை இந்தியாவில் தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மத்திய வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜின் இலங்கை பயணம் தமிழக மீனவர் பிரச்சினையில் நல்ல தீர்வினை ஏற்படுத்துவதாக அமையவேண்டும். ‘கெயில்’ எரிவாயு குழாய் பிரச்சினையில் விவசாயிகளை பாதிக்காத வகையில் மாற்றுத்திட்டத்துக்கு அரசு ஏற்பாடு செய்யவேண்டும். ராகுல்காந்தியை தமிழக முதல்வராக வரவேண்டும் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசி வருகிறார். ராகுல்காந்தியை ஒரு தேசிய தலைவராகத்தான் த.மா.கா பார்க்கிறது. மாநிலத்தலைவராக அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *