மழை பாதிப்பால் மாணவர்களின் தேர்வு–கல்வி கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்: ஜி.கே. வாசன்

சென்னை, டிச. 17–

த.மா.கா. சார்பில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ– மாணவிகள் 25 ஆயிரம் பேருக்கு நோட்டு – புத்தகங்கள், புத்தகப்பை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பெசன்ட்நகர் அவ்வை இல்ல மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்தது. அந்த பள்ளியை சேர்ந்த 1100 பேருக்கு ஜி.கே.வாசன் கல்வி உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் ஜி.கே.வாசன் கூறியதாவது:–

த.மா.கா.வின் இளைஞர் மற்றும் மாணவர் பிரிவு சார்பில் இந்த உதவிகள் வழங்கப்படுகின்றன. இளைஞர் அணி தலைவர் சுனில் ராஜா ஆகியோர் இந்த வார இறுதிக்குள் அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று வழங்குகிறார்கள்.

கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு செய்முறை மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்குவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிலையங்களில் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை சரி செய்ய நுழைவுத் தேர்வை தமிழில் எழுத மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ. பபடத்திட்டத்தில் அனைத்து தரப்பு மாணவர்களும் படிக்க வசதியாக எல்லா மாவட்டங்களிலும் கேந்திர வித்யாலயா பள்ளிகளை தொடங்க வேண்டும்.

மழை பாதிப்பின் காரணமாக மாணவர்களின் தேர்வு மற்றும் கல்விக் கட்டணங்களை அரசு ரத்து செய்ய வேண்டும். கல்விக் கடன்களை திரும்ப செலுத்துவதற்கான கால அளவை நீட்டிக்க வேண்டும்.

கோவில்களில் அனைத்து தரப்பினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்பதே பொதுவான கருத்து. அதற்கு ஏற்ற வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.