பூந்தமல்லி,
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ள தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
டெல்லி வாழ் தமிழர்கள் நிவாரணம்
தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் டெல்லியில் வாழும் தமிழர்கள் அரிசி, பருப்பு, எண்ணெய், உடைகள், பிஸ்கெட் உள்பட மொத்தம் 16 டன் நிவாரண பொருட்களை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் அந்த நிவாரண பொருட்களை சென்னையில் உள்ள 6 தொண்டு நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்கும் நிகழ்ச்சி போரூரில் நடைபெற்றது. பின்னர் நிருபர்களிடம் ஜி.கே.வாசன் கூறியதாவது:-
உதவிக்கரம்
தமிழகத்தில் பெய்த பலத்த மழையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழ் சமுதாய மக்கள் உதவிக்கரம் நீட்டும் வகையில் டெல்லி மாநகராட்சி கவுன்சிலர் ராஜா தலைமையில் 3 நாட்களாக நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்பி வைத்து உள்ளனர்.
இந்த நிவாரண பொருட் களை இங்கு தரம் பிரித்து சென்னையில் உள்ள 6 தொண்டு நிறுவனங்களிடம் கொடுத்து, அவைகள் பாதிக் கப்பட்ட பொதுமக்களை சென்றடையும் வகையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
மீனவர்களை மீட்க நடவடிக்கை
கடந்த புதன்கிழமை புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இது இலங்கை கடற்படையின் பிடிவாத போக்கை காட்டுகிறது. தமிழக மீனவர்களை மீட்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும். அதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஏற்கனவே 33 மீனவர்கள் மற்றும் 60 படகுகளை தமிழக அரசிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டும். இதனை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அரசு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் தென் சென்னை மேற்கு மாவட்ட தலைவர் ஈ.சி.சேகர், முத்து, உமா உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
