நம் நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக ராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் பணி மகத்தானது. குறிப்பாக தங்கள் குடும்பங்களை விட்டு, பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், கடும் வெயில், மழை, பனி என்று பாராமல் தாய் நாட்டிற்காக உழைக்கும் உழைப்பு போற்றுதலுக்குரியது.
அந்த வகையில் தமிழகத்தின், தஞ்சைப் பகுதியில் இருந்து ராணுவ வீரர் இளவரசன் என்பவர் நாட்டின் எல்லைப் பகுதியான காஷ்மீர் அருகே பணிபுரிந்து கொண்டிருந்தார்.
தற்போது காஷ்மீர் பகுதியில் பெய்த கடும் பனிப்பொழிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்கள். அதில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசனும் உயிரிழந்திருக்கிறார். இச்செய்தியை அறிந்த அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இப்பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த இளவரசன் மற்றும் பிற ராணுவ வீரர்களுக்கும் வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீரில் உயிரிழந்த தஞ்சையைச் சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன் உடலை விரைவில் மீட்பதற்காகவும், காலம் தாழ்த்தாமல் தமிழகத்துக்கு கொண்டுவருவதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
