தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கை: வறட்சி, வெள்ளம், புயல் போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் வங்கிகளின் கெடுபிடி நடவடிக்கைகளாலும், மனம் உடைந்தும் தற்கொலை செய்து கொள்கின்றனர்.எனவே விவசாயக் கடனை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் தமிழக அரசு சிறு, குறு விவசாயிகளுக்கான கூட்டுறவு வங்கிக்கடனை மட்டும் தள்ளுபடி செய்தது. இது போதுமானதல்ல.
தற்போது வறட்சி மாநிலமாக தமிழகம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையிலும், பணத்தட்டுப்பாட்டை கவனத்தில் கொண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும் நோக்கில் அனைத்து விவசாயிகளின் அனைத்து விதமான விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் விவசாயிகள் பெற்ற குறுகிய கால பயிர்க் கடனுக்கான வட்டியை மட்டும் தள்ளுபடி செய்ய மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரூ. 660.50 கோடி பயிர்க்கடன் வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதுவும் போதுமானதல்ல. விவசாயிகளுக்கு இது பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன் முழுவதையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசிய வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை. – See more at: http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=102888#sthash.z8FJdlM5.dpuf
