சென்னை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் பெய்த கனமழையால் குறிப்பாக கடலோர மாவட்டங்களான சென்னை, புறநகர் பகுதி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற பகுதிகளில் பெருத்த சேதம் ஏற்பட்டு மக்கள் கவலையுடன் பெரும் அல்லல்படுகிறார்கள். இச்சூழலில் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும்.
தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கு சுகாதாரத்துறை தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீடு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், வங்கிக்கணக்கு மற்றும் வாகனங்கள் தொடர்பான பல்வேறு முக்கிய ஆவணங்களை இழந்தவர்களுக்கு உடனடியாக அதனை கொடுப்பதற்கு அது தொடர்பான துறையினரை அரசு முடுக்கிவிட வேண்டும். ரேஷன் கார்டுகளை இழந்தவர்களுக்கு அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்கும் கடைகளிலேயே ரேஷன் கார்டுகளை பெற்றுக்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, கனமழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடவும், நிவாரணப் பொருட்களை அனைவருக்கும் வழங்கி, விரைவில் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தொடர், தீவிர நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
