தஞ்சாவூர், டிச. 8–
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
வரலாறு காணாத வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையான மழை, வெள்ளம் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள மக்கள் தங்கள் உடமைகள், பொருட்கள் போன்றவற்றை இழந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் குடும்பஅட்டை, வீட்டுபத்திரங்கள், ஆதார் அட்டை, மின்வாரிய கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, மாணவர்களின் சான்றிதழ்கள் போன்றவற்றையும் இழந்துள்ளனர்.
அவர்களுக்கு அந்த ஆவணங்கள் கிடைக்க தமிழக அரசு தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்தாலும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதிகளில் சுகாதார துறை மூலம் 24 மணி நேரமும் மருத்துவ சேவைகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூட்டி இருக்கும் வீடுகளில் சமூக விரோதிகள் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க 24 மணிநேர போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
மத்திய, மாநில, அரசுகள் வழங்கும் நிவாரணம் முறையாக பொதுமக்களை சென்றடையும் வகையில் அந்த பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் மூட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையின் காரணமாக சம்பா நெற்பயிர்கள் மூழ்கி விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.மேலும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் வாங்கிய கடன் அசல் மற்றும் வட்டி ஆகியவற்கை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண பொருட்களை பல்வேறு தன்னார்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் பல்வேறு அமைப்புகளும் நன்கொடையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ளவற்றை அளிக்கிறார்கள்.
இந்த நிவாரண பொருட்கள் முறையாக பாதிக்கப்பட்டவர்களை சென்றடைய தமிழக அரசு தனி அமைச்சகம், தனித்துறை ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
சென்னை மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சை மாவட்டத்தின் சார்பில் கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் 10 ஆயிரம் பேருக்காக உணவு பொருட்களை சேகரித்து வைத்துள்ளனர்.அந்த பொருட்களை பிளாஸ்டிக் வாளியில் வைத்து நாளை மறுதினம் நான் கடலூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று வழங்க உள்ளேன்.
காவிரி டெல்டா மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக மழை காரணமாக விவசாய பணிகள் நடைபெறவில்லை. அதனால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும், பெண்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரண உதவியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம்குமார், திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் எஸ்.பி.அந்தோணிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பேராவூரணி திருஞான சம்பந்தம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
