தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியிடம் மக்கள் பலம் இருக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணியிடம் மக்கள் பலம் இருக்கிறது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பேசினார்.

தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் கே.தங்கவேல் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் வடக்குத் தொகுதியில் போட்டியிடும் ரவி(எ) சுப்பிரமணியன் (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரை ஆதரித்து திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஞாயிற்றுக்கிழமை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

பின்னலாடை ஏற்றுமதி மூலமாகப் பொருளாதாரத்தை உயர்த்தும் திறனுடைய திருப்பூர் மாநகரில் மக்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றித் தரப்படவில்லை. இ.எஸ்.ஐ. மருத்துவமனை, உள்நாட்டு பனியன் சந்தை, தொழிலாளர்கள் தங்குவதற்குத் தேவையான விடுதி வசதிகள் என எந்தவொரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

திருப்பூர் மக்களுக்குத் தேவையான திட்டங்கள், நிறைவேற்றப்படாத திட்டங்கள் அனைத்தையும் தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெற்று, கூட்டாட்சி அமைத்து, நிறைவேற்றித் தருவோம். திருப்பூரில் மழைக் காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகி பலரும் இறப்பது தொடர்ந்து நிகழும் சம்பவங்களாக உள்ளன. திமுக, அதிமுக கட்சிகள் மட்டுமே இந்த நிலைக்குக் காரணம்.

தமிழகத்தில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் இந்த இருகட்சிகளிடம் எளிமை, நேர்மை, வெளிப்படை, தூய்மை என எதுவும் இல்லை. மதுவை ஒழிக்க நல்லவர்கள், நாணயமானவர்களால் மட்டுமே முடியும். தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் மதுவை ஒழிக்க முடியாது. எங்களுக்கு மடியில் கனமில்லை. அதனால் வழியிலும் பயமில்லை.

எங்களது கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக கட்சியின் அலுவலகம் கடந்த வாரம் தாக்கப்பட்டது. அடுத்து திருவாரூரில் பிரசாரத்தின்போது வைகோ மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலுக்கு திமுகவே காரணம் என்று வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இது அவர்களுக்கான தேர்தல் ஜுரத்தை காட்டுகிறது. எங்களிடம் பணம், ஆள், அதிகாரம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்கள் பலம் இருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஊழலில் இருந்து தமிழகத்தைக் காக்க முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *