தமிழகத்தில் விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டப் பகுதிகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சாரத்தை விவசாய நிலங்கள் மீது டவர்லைன் அமைத்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை மின்சாரத்தை சிறு, குறு விவசாய நிலங்களின் வழியாக உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைத்து கொண்டு செல்கின்றன. இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தின் அளவு 52 மீட்டர் அகலம். இந்த மின்பாதை செல்லும் நிலத்தில் எவ்வித விவசாயம், கட்டுமானம், ஆழ்துளை கிணறு அமைக்கக்கூடாது. இவ்வாறு கட்டுப்பாட்டோடு செயல்பட்டு வரும் திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாகின்றன. உதாரணத்திற்கு திருப்பூர் ராசிப்பாளையம் முதல் பாலவாடி வரை 2500 ஏக்கர் நிலங்கள் பாழாகின்றன. உயர் அழுத்த மின்சார கோபுரங்களினால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டப்பாதையில் பயிர் செய்ய கட்டுப்பாடு உள்ளது. விவசாயிகள் குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழக அரசு மின்பாதைகள் அமைத்து மின் கோபுரங்கள் வழியாக மின்சாரத்தை எடுத்துச் செல்வதற்கு பதிலாக சாலை ஓரமாக கேபிள்கள் பதித்து மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். அரசின் அனுமதி இல்லாமல், எந்த ஒரு மின் கடவுத்திட்டத்தையும் தொடங்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தினை அனுமதித்திடக் கூடாது. தமிழக அரசு தமிழகத்தில் விவசாயிகள், நில உரிமையாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மின்கடவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு வாசன் வௌியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
