த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் திருவாரூரில் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
திருவாரூர் மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. திருவாரூர் கமலாலய குளம் தண்ணீர் இல்லாமல் உள்ளது. திருவாரூரில் விரைவில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்ககூடாது. இந்த திட்டத்தால் வறட்சி ஏற்படும். தமிழக அரசு நெடுஞ்சாலை பகுதியில் மூடப்பட்ட மதுபான கடைகளை வருமானத்துக்காக மீண்டும் திறக்க கூடாது. மதுபான கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு வேறு வேலை வழங்க வேண்டும்.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துவிட்டு பிரதமரிடம் பேச உள்ளார். இதனால் இந்த பிரச்சினைக்கு நாளை நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுகுழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒற்றை தீர்ப்பாயத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா இணையுமா? என்று நிருபர்கள் கேட்டபோது அதற்கு பதில் அளித்த ஜி.கே.வாசன் அ.தி.மு.க.வில் நிலவும் பிரச்சினை முடிவுக்கு வந்ததும் கூட்டணி பற்றி முடிவு செய்வோம் என்று கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாவட்ட செயலாளர் செந்தில் பாண்டியன், மாவட்ட துணை தலைவர் மணக்கால் ராமகிருஷ்ணன், வக்கீல் சாந்த பாலன் ஆகியோர் உடன் இருந்தனர்.
