தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியில் இருந்து 21ம் தேதி அன்று மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்தி, அவர்களது மீன்பிடிச் சாதனங்களை சேதப்படுத்தி, கைது செய்து, அவர்களது 2 படகுகளையும் பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் தமிழகத்தின் ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சுமார் 150 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் இப்பகுதியில் தொடர்ந்து மீன்பிடித்தீர்கள் என்றால் உங்கள் அனைவரையும் கைது செய்வோம் என்றும் மிரட்டியுள்ளனர்.
இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை இலங்கை அரசு கண்டிக்காதது என்பது அந்நாட்டு அரசுக்கு மனிதாபிமானம் என்பதே தெரியவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அச்சுறுத்துவது, கைது செய்வது குறித்து மத்திய பாஜ அரசு இலங்கை அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.
இது வரை இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 15 மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்து, தற்போது பறிமுதல் செய்த 2 படகுகள் மற்றும் ஏற்கனவே இலங்கை வசம் இருக்கும் 26 படகுகள் என மொத்தம் 28 படகுகளையும் திரும்ப ஒப்படைக்குமாறு இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.
மத்திய அரசு இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்தை நிறுத்துவதற்காக சம்பிரதாயத்திற்காக அந்நாட்டு அரசோடு பேசுவதையும் கைவிட்டு, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு காலக்கெடுவிற்குள் இப்பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும். தமிழக மீனவ சமுதாய மக்களின் மீன்பிடித் தொழில் நிம்மதியாக தொடர, ஒரு நல்ல சூழலை ஏற்படுத்திதர மத்திய அரசுக்கு தமிழக அரசு மேலும் அழுத்தம் கொடுத்து மீனவர்கள் நலன் காத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
