துப்புரவு பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்:
ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை
இது தொடர்பாக த.மா.கா. தலைவர் ஐயா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள், மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்கள் பகுதி நேர ஊழியர்கள் என அறிவிக்கப்பட்டு மிகக் குறைவான தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
புதிதாக நியமிக்கப்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு குறைந்தபட்சம் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் ஊராட்சிகளின் துப்புரவுப் பணியை தனியார் மயமாக்க நினைப்பதை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும். ஏனெனில் துப்புரவு பணியை தனியார் மயமாக்கினால் பொது சுகாதாரத்தை பாதுகாக்க முடியாது.
எனவே துப்புரவுப் பணியை தனியார் மயமாக்காமல் அனைத்து துப்புரவு தொழிலாளர்களுக்கும் சமமான சம்பளம் வழங்க வேண்டும்.
ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களை இ.பி.எப் திட்டத்தில் இணைத்திட வேண்டும்.
வயது முதிர்வின் காரணமாக பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணிக்கொடையாக ஒரு லட்சம் ரூபாயும், மாதம் தோறும் பென்சன் தொகையாக குறைந்தபட்சம் 3 ஆயிரமும் வழங்க வேண்டும்.
எனவே தமிழகத்தில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியம், தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழலில் பணிபுரிந்து வரும் துப்புரவு பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றிட, அவர்கள் வாழ்க்கைத்தரம் மேம்பட தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
