‘தமிழகத்தில் மதுவுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்

‘தமிழகத்தில் மதுவுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்’ என்று ஆவடி நகர த.மா.கா முப்பெரும் விழாவில் ஐயா ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஆவடி நகர தமாகா சார்பில் காமராஜர், மூப்பனார் பிறந்த நாள், கொடியேற்றி கல்வெட்டு திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நேற்றிரவு பட்டாபிராமில் நடைபெற்றது.

நகர தலைவர் அ.அமித்பாபு தலைமை தாங்கினார்.

நிர்வாகிகள் பொன்னுசாமி, கணேசன், ஆனந்தன், பழனி, அன்பு, சம்பத்குமார், ராஜ்குமார், சிவகாந்த், ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர பொதுச்செயலாளர் ஏ.எல்.ஆனந்தராஜ் வரவேற்றார்.

தலைவர் ஜி.கே.வாசன், தமாகா கொடியேற்றி கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது;

‘மது இல்லா தமிழகம் வேண்டும்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் போராடி வருகின்றனர்.

இதை முக்கிய பிரச்னையாகக் கருதி, அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.

தமிழகத்தில் மதுவை ஒழிக்க தமாகாவும் போராடி வருகிறது.

மது இல்லாத தமிழகத்துக்காக நகர, வட்டார, கிராமம் தோறும் எங்களின் இயக்க தொண்டர்கள் மூலம் மக்களிடம் கையெழுத்து பெற்று வருகிறோம்.

மேலும், இப்பகுதியில் வரும் 15-ம் தேதி கையெழுத்து இயக்கம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று பதிவேட்டில் கையெழுத்து இட வேண்டும். விரைவில், தமிழகம் மது இல்லாத மாநிலமாக மாறும்.

ஆவடி சட்டமன்றத் தொகுதி மற்றும் நகராட்சியில் தமாகாவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால், இப்பகுதியை மாதிரி தொகுதியாக, நகராட்சியாக மாற்றி காட்டுவோம்.

ஏற்கனவே ஆவடி நகராட்சி தலைவராக விக்டரி மோகன் இருந்தபோது, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செய்து கொடுத்துள்ளார்.

மேலும், இங்கு பல்வேறு அடிப்படை பிரச்னைகளையும் தீர்த்து வைத்துள்ளார்.

தமாகா பொறுப்பில் இல்லாவிட்டாலும், அந்தந்த பகுதி மக்களுக்காக தொடர்ந்து பாடுபடும் இயக்கமாகும்.
இவ்வாறு ஐயா ஜி.கே.வாசன் பேசினார்.

முன்னதாக, ஆவடியில் உள்ள காமராஜர் சிலைக்கு ஜி.கே.வாசன் மாலை அணிவித்தார். மேலும், பள்ளிகளில் நடுவதற்கு மாணவர்களிடம் மரக்கன்றுகளையும், 300 பெண்களுக்கு இலவச சேலைகளையும் ஐயா ஜி.கே.வாசன் வழங்கினார்.

இவ்விழாவில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் விக்டரி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.