காலாவதியான சுங்க சாவடி
களை மூட வேண்டும், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு முழுவதும் த.மா.கா.வின் இளைஞர் அணி சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு முழுவதும் 30 இடங்களில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று த.மா.கா. இளைஞர் அணி தலைவர் யுவராஜா ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதன்படி கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள சுங்கச்சாவடி தலைமை அலுவலகம் முன்பு மாநில தலைவர் யுவராஜா தலைமையில் முற்றுகை போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு 8 மாவட்ட இளைஞர் த.மா.கா. தலைவர்கள் முன்னிலை வகித்தனர். த.மா.கா. மாநில நிர்வாகிகள் கத்திப்பாரா ஜெனார்த்தனன், சக்திவடி வேல், திருவேங்கடம், மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் மந்தைவெளி ராம. அருண், முனவர் பாட்சா, சைதை மனோகரன், ஜவகர்பாபு, சைதை நாகராஜன், வில்லிவாக்கம் சுரேஷ், மாவட்ட தலைவர்கள் இல.பாஸ்கரன், ராஜ்குமார், பிஜு சாக்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட யுவராஜா உள்பட இளைஞர் த.மா.கா.வினர் சுமார் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி சார்பில் பட்டறை பெருமந்தூர் சுங்கசாவடி முன்பு முற்றுகை போராட்டம் நடந்தது.
திருவள்ளூர் தெற்கு மாவட்ட த.மா.கா. இளைஞர் அணி செயலாளர் பரமேஸ்வரன், வடக்கு மாவட்ட செயலாளர் அருண் பிரசாத், மாவட்ட தலைவர் விக்டரி மோகன் ஆகியோர் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்திய த.மா.கா. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
