தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
ஒட்டன்சத்திரத்தில், தமாகா திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் டாக்டர் எம்.கே. சின்னச்சாமி இல்ல விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொள்வதற்காக கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் ஒட்டன்சத்திரம் வந்திருந்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. சபாநாயகர் நடுநிலையாகப் பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிராமங்கள்தோறும் சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலுக்காக, தொடர்ந்து கூட்டங்களை நடத்தி இயக்கத்தை வலுப்படுத்தி வருகிறோம். மாவட்டங்கள்தோறும் கூட்டங்கள் நடத்தி நிர்வாகிகளின் விருப்பத்துக்கேற்ப கூட்டணி அமைக்கப்படும். ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமாகா வெல்லக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அங்கு வெல்வதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
நிகழ்ச்சியில், மாநில துணைத் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன், மாநில இளைஞர் அணித் தலைவர் யுவராஜ், திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கே. ராசியப்பன், கிழக்கு மாவட்டத் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
