தமிழக மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வு காணாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமாகா சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். ஞானதேசிகன், கோவை தங்கம், கத்திப்பாரா ஜெனார்தனன், ஞானசேகரன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், சி.பிஜு, அருண்குமார், அண்ணாநகர் ராம்குமார், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன், டி.எம்.பிரபாகர், அசோகன், மால்மருகன், தி.நகர் கோதண்டன், கோயில் பாஸ்கர், நரேஷ்குமார், மடுவை சரவணன், சைதை நாகராஜன், கோபாலகிருஷணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஜி.கே.வாசன் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு திட்டங்கள் நிலுவையில் உள்ளது. மேலும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் அரைகுறையாக நடக்கிறது. தற்போது தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது. குடிக்க கூட தண்ணீர் இல்லாத சூழ்நிலை உருவாகி உள்ளது. மீனவர்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். மக்கள் விரும்பாத திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் திணிக்க பார்க்கிறது. அண்டை மாநிலங்களில் அணை கட்டுவதை கூட தட்டிக் கேட்க முடியாத நாதியற்ற அரசாக தமிழக அரசு செயல்படுகிறது. விவசாய கடன்களை ரத்து செய்யும் கோரிக்கைக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க மறுக்கிறது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில்லை. இப்படி எந்தவித அடிப்படை பிரச்னைகளுக்கும் தீர்வு காண முடியாமல் மக்கள் வாழ்கின்றனர். தமிழக அரசு மக்களின் நம்பிக்கை இழந்த அரசாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது.சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய அரசாக அதிமுக அரசு செயல்படுகிறது. அதிமுகவில் நடக்கும் உட்கட்சி சண்டைகளை சரி செய்யவே நேரம் சரியாக இருக்கிறது. இதனால் மக்களின் பிரச்னைகளை எப்படி தீர்ப்பார்கள். ஒருபுறம் அதிமுக துரோகம் செய்கிறது என்றால், மறுபுறம் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
