கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை தமிழக அரசுக்கு வாசன் கோரிக்கை

கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவை தொகையான ரூ.600 கோடியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் சுமார் 300 லட்சம் டன் உற்பத்தியான கரும்பு கடும் வறட்சி, இயற்கை சீற்றம் போன்ற காரணத்தால் தற்போது சுமார் 150 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.  ஒரு டன் கரும்பு உற்பத்திக்கு ஆகும் செலவு குறைந்த பட்சம் ரூபாய் 3,000. இந்நிலையில் மத்திய அரசு கரும்புக்கு ஆதார விலையாக டன் ஒன்றுக்கு 2,300 ரூபாயை நிர்ணயம் செய்தது. தமிழக அரசு – கரும்பு டன் ஒன்றுக்கு வாடகையாக ரூபாய் 100ம், உற்பத்தி மானியமாக 450 ரூபாயும், மத்திய அரசின் ஆதார விலையான 2,300 ரூபாய் சேர்த்து மொத்தம் 2,850 ரூபாயை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க அரசு, பொதுத்துறை, தனியார் ஆலை நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பித்தது.

ஆனால் தமிழகத்தில் உள்ள கரும்பு ஆலைகளின் நிர்வாகம் மத்திய அரசின் ஆதார விலையான 2,300 ரூபாயுடன் 125 ரூபாய் மட்டும் சேர்த்து மொத்தம் 2,425 ரூபாய் மட்டுமே வழங்குகிறது.  எனவே மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்த ஆதார விலையை கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலை நிர்வாம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. மேலும் கரும்பு விவசாயிகளுக்கு தனியார் ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூபாய் 600 கோடியையும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத்தொகையான 300 கோடி ரூபாயும் காலம் தாழ்த்தாமல் வழங்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *