சுங்கக் கட்டணத்தை ரத்து செய்க: ஜி.கே.வாசன்

நாடு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன உரிமையாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காலாவதியான சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 44 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 29 சாவடிகள் தனியார் கட்டுப்பாட்டிலும், 12 சாவடிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. அதிக சுங்கக் கட்டணத்தால் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விலை உயருகிறது.

வரும் ஏப்ரல் முதல் சுங்கக் கட்டணம் 7 சதவீதத்திலிரும்து 12 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, நாடு முழுவதும் சுங்கக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று வாசன் தெரிவித்துள்ளார்.