கிரண்பேடியின் செயல்பாடுகள் ஜனநாயக விரோதப் போக்காகும்: ஜி.கே. வாசன்

மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில்,

ஜிஎஸ்டி வரிவிதிப்பில் மத்திய அரசு அவசரம் காட்டியது. இதனால் நியாயத்தை அவர்களால் கொடுக்கமுடியவில்லை.

அறிமுகத்தின் தொடக்கத்திலேயே ஜிஎஸ்டி, கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. திரைப்படம், பட்டாசு, தீப்பெட்டி உள்ளிட்ட துறைகளில் உள்ளோர், இந்த வரி விதிப்பால் மத்திய அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
அடுத்த மாதம் முதல்வாரத்தில் மீண்டும் ஜிஎஸ்டி கவுன்சில் கூடவுள்ளது. பல்வேறு துறைகளைச் சார்ந்தோர் தாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவார்கள்.

அதனைப் பரிசீலித்து ஜிஎஸ்டி வரிவிதிப்பை சீர் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் தமாக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்’ என்றார்

விவசாயிகள் கடன் வசூலிப்பின்போது ஜப்தி நடவடிக்கை கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை வரவேற்கிறேன்.

கடந்த 1995ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

2015ஆம் ஆண்டு மட்டும் 12 ஆயிரத்து 602 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளதாக தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது. இவையெல்லாம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமானால் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழகம் வறட்சி மாநிலம் என்று எதிர்க்கட்சிகளும் மக்களும் சொல்கிறார்கள். ஆனால் தமிழக அரசின் மூத்த வழக்கறிஞரே தமிழகத்தில் முழு வறட்சி இல்லை என்று வாதிடுவது வெட்கக்கேடானது.

இது விவசாயிகளை அவமானப்படுத்துவதாகும். மத்தியப்பிரதேசம், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மகராட்டிர மாநிலங்கள் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யும்போது, தமிழகத்திற்கு ஏன் அந்த மனிதாபிமானமில்லை?

தமிழக மீனவர் பிரச்சனை தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசின் புதிய சட்டத்தால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றிலும் முடக்குவதாக உள்ளது. இலங்கை அரசின் இதுபோன்ற ஆதிக்க மனப்பான்மைக்கு இந்திய அரசு இடம் கொடுக்கவோ, பணிந்து போகவோ கூடாது.

தில்லி, மேற்குவங்கம், புதுச்சேரி மாநிலங்களிலுள்ள ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களின் முதல்வர்களோடு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திக் கொண்டு செயல்படுவது ஜனநாயக விரோதப் போக்காகும்.

அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சி இதனால் கடும் பாதிப்பிற்கு ஆளாக நேரிடும். மத்திய அரசு இதனை உணர்ந்து செயல்பட வேண்டும்.

விவசாயிகளின் நிலையை உணர்ந்து அவர்களுக்கான மின்னிணைப்பை இலவசமாகத் தமிழக அரசு செய்ய வேண்டும். அதைவிடுத்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட அவர்களிடம் ரூ.2 லட்சம் கட்டணமாகக் கேட்பது வேதனைக்குரியது.

கதிராமங்கலத்திலுள்ள மக்களை அச்சுறுத்தும் வகையில் ஓஎன்ஜிசி-யின் செயல்பாடுகள் உள்ளன.

எண்ணெய் செல்லும் குழாய்கள் அவ்வப்போது பற்றி எரிவதால் மக்கள் பீதிக்குள்ளாக நேரிடுகிறது. இதற்கிடையே அங்குள்ள அதிகாரிகள், ஆட்சித்தலைவர் மட்டுமன்றி தமிழக முதல்வரே குற்றம் சொல்வது எந்த மாநிலத்திலும் நடைபெறாத ஒன்று.

நியாயமாகப் போராடியவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு, கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட்டு, உடனடியாக வழக்குகளை வாபஸ் பெற்று விடுதலை செய்ய வேண்டும்.

அதேபோன்று புதுக்கோட்டை நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆயத்தப்பணிகளை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.

தமிழக அரசு, மறுத்தாலும் மத்திய அரசு அதனைக் காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் ஆதிக்க மனோபாவத்திற்கும், தமிழக அரசின் பலவீனத்திற்கும் இது எடுத்துக்காட்டு’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *