உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் தமாகா தலைவர் ஜிகே.வாசன்.
கரூரில் மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் சிவசாமியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க புதன்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தனியார் பள்ளிகளில் அதிகளவில் நன்கொடை, கட்டண வசூல் நடக்கிறது. இந்தக் கல்விக்கொள்ளையை மத்திய,மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த புதிய அணுகுமுறை தேவை. தேர்தலின்போது விவசாயக் கடன் ரத்து செய்யப்படும் என்றார்கள். முழுவதுமாக ரத்து செய்யப்படவில்லை. கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
தமாகாவை பொறுத்தவரை விரைவில் நடக்க உள்ள 5-வது கூட்டத்தில் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்வோம். மீனவர் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் வெறும் கண்துடைப்பாகவே உள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் நலக்கூட்டணியில் எந்தத் தலைவர்களுக்கும் கருத்து வேறுபாடு கிடையாது.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைக்கு ஏற்பட்ட தோல்விக்கு சான்று அரவக்குறிச்சி, தஞ்சையில் தேர்தல் ரத்து. இனி வரும் தேர்தல்களிலாவது புதிய வழிமுறைகளை கையாள தேர்தல் ஆணையம் ஆலோசிக்க வேண்டும். அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதி வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்வதென்றால் 234 தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும் என்றார்.
பேட்டியின் போது முன்னாள் எம்எல்ஏ விடியல்சேகர், மூக்கணாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் சிவசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்
