இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் உட்பட அனைத்து தமிழக மீனவர்களையும் இலங்கை அரசு உடனடியாக விடுதலை செய்வதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நேற்றைய முன் தினம் 30.12.2015 புதன்கிழமை அன்று ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்டப் பகுதியைச் சேர்ந்த 29 மீனவர்கள் இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் மீனவர்கள் பிரச்சனை முடிவுக்கு வர வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மத்திய, மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்த சமயத்தில் 2016 ஆம் ஆண்டின் புத்தாண்டின் தொடக்கத்திலேயே தமிழக மீனவர்கள் பிரச்சனை இலங்கை கடற்படையால் மீண்டும் தொடர்ந்திருப்பது இலங்கை அரசின் அராஜகப் போக்கை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
மேலும் தற்போது தமிழகத்தில் பண்டிகைக் காலமாக இருப்பதால் ஏற்கனவே இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் மற்றும் தற்போது கைது செய்யப்பட்ட நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 29 மீனவர்கள் அனைவரையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுதலை செய்வதற்கும், அவர்களது படகுகளையும் உரிய மீனவர்களிடம் ஒப்படைப்பதற்கும் மத்திய அரசு உடனடி நடவடிககை எடுக்க வேண்டும்.
எனவே இனி வரும் காலங்களில் மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரம் தடையின்றி தொடர்வதற்கும் மத்திய அரசு இலங்கை அரசோடு உடனடி பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவை ஏற்படுத்தி தர வேண்டும். தமிழக அரசும் இதற்காக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
