பொங்கல் திருநாள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் உவகையோடு கொண்டாடி மகிழும் நாள். அது உழவர் திருநாள். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் நாள். உழைப்பின் பயனை நுகரும் நாள். வெளிச்சத்தைத் தரும் ஆதவனையும், விளைச்சலைத் தரும் நிலத்தையும், வேளாண்மைக்குத் துணைநிற்கும் ஆவினங்களையும் நன்றியோடு போற்றி வணங்கும் நாள். சுருங்கச் சொல்வதென்றால் இது தமிழர் திருநாள்.
இந்நன்னாளில் தமிழர்கள் புத்தாடை அணிகிறார்கள், பழைய மரபினைப் போற்றுகிறார்கள், புதிய வரவினை ஏற்கிறார்கள். இனிய பொங்கலிட்டு எல்லோருக்கும் வழங்குகிறார்கள், இணைந்து உண்டு மகிழ்கிறார்கள். ” பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்” என்ற வள்ளுவன் வழி தொடர்ந்து நடக்கத் துணிகிறார்கள். தாங்கள் நம்பும் இயற்கைக்கும், இறைவனுக்கும் நன்றி பாராட்டி மகிழ்கிறார்கள். கடந்த ஆண்டு இயற்கையின் சீற்றத்திற்கு ஆளாகிவிட்டோம். தமிழ் மக்கள் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகிவிட்டார்கள். தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு புதுப்பானையில் பால் பொங்கும் போது மக்கள் மனதில் மகிழ்ச்சி பொங்க வேண்டும். வேளாண்மை செழிக்க வேண்டும். இயற்கை அன்னை இருகரம் நீட்டி நம்மை அரவணைக்க வேண்டும். எல்லா நலனும், வளமும் தமிழ் மக்கள் பெற வேண்டும். இயற்கையும், இறைவனும் அதற்கு துணை நிற்க வேண்டும். “இனிய பொங்கல் நாளான இன்று முதல, நாம் அனுபவித்த தொல்லைகள், துயரங்கள் மறையட்டும், மக்கள் மனங்களில் மகிழ்ச்சி மலரட்டும், இல்லங்களில் ஒளி பரவட்டும், இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறட்டும். எல்லாம் வல்ல இறைவன் அதற்குத் துணை நிற்க வேண்டும் ” – என்று இந்த இனிய நாளில் இறைவனை வேண்டுகிறேன்.
நாம் பெரிதும் மதித்துப் போற்றும் தமிழ் மக்களுக்கு மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்
