மெட்ரோ ரயில் கட்டணத்தை அதன் நிர்வாகம் குறைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பயணக் கட்டணத்தை 50 ரூபாயாக உயர்த்த அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.
டெல்லியில் மெட்ரோ ரயில் பயணிகளிடம் குறைந்த பட்சமாக 8 ரூபாயும், அதிக பட்சமாக 30 ரூபாயும் வசூலிக்கப்படுவதாகவும் பெங்களூரில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய 25 கிலோ மீட்டர் தொலைவுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்யப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பிற மாநிலங்களில் மெட்ரோ ரயில் பயணக் கட்டணம் குறைவாக இருப்பது போல சென்னையிலும் ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
