மழை வெள்ள சேதாரம்
தமிழக அரசு மீது தலைவர் திரு.ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாவட்ட மக்களுக்கு ரூ. 6. 5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தமாகா தலைவர் திரு.ஜி. கே. வாசன் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமாகா அலுவலகத்தில் வழங்கினார்.
அதன்பின்னர் அளித்த பேட்டி:
கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழை வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் பெரும் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர். தொலைநோக்கு பார்வையுடனும், நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களை முறைப்படுத்ததாலும், அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்ததாலும் இந்தளவு மழை வெள்ள சேதத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் தூர்வாரி பராமரிக்கப்படாததாலும் மழைநீர் வெளியேற முடியாமல், பல்வேறு இடங்களில் தேங்கி காணப்படுகிறது. மேலும், இதற்குரிய மாற்று நடவடிக்கைகளை தமிழக அரசு உரிய நேரத்தில் எடுக்காததால், சமீபத்தில் பெய்த மழையில் கிடைத்த 25 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. மழையினால் கிடைத்த நீரை வீணடிப்பது, தமிழக அரசுக்கு நல்லதல்ல.
தமிழகத்தில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடி என்பது மிகவும் குறைவு.
இந்த நிதியை மேலும் உயர்த்தி, அந்த நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளின் கரையோரங்களில் வீடு கட்ட தமிழக அரசு அனுமதி தரக்கூடாது.
இதில் எந்த அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதற்கு ஒரு கண்டிப்பான உத்தரவு தேவை.
சென்னை மாநகராட்சியின் மழை நிவாரணப் பணிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக அமைய வேண்டும்.
இவ்வாறு
தலைவர் திரு.ஜி. கே. வாசன் கூறினார்.
