காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்: வாசன் பேச்சு

சென்னை, நவ. 19–

தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகரும், மயிலாப்பூர் வியாபாரிகள் சங்க தலைவருமான மறைந்த மயிலை பெரியசாமியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி த.மா.கா. சார்பில் இன்று அடையாறில் அனுசரிக்கப்பட்டது.

இதில் த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு மயிலை பெரியசாமியின் உருவ படத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–

மறைந்த மயிலை பெரியசாமி அவர்கள் தென் மாவட்ட வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து பலமுறை டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளார்.

முக்கியமாக சென்னை– திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விடுவதற்கு நான் மத்திய மந்திரியாக இருந்த போது என்னிடம் பலமுறை வற்புறுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் மற்றும் த.மா.கா.வில் இணைந்து போராட்டங்கள் நடத்தி சிறை சென்று உள்ளார். அவரது நினைவை போற்றும் வகையில் ஒன்று கூடி அவருக்கு மரியாதை செய்து உள்ளோம்.

தமிழகத்தில் இவ்வளவு மழை பெய்தும் மேட்டூர் அணை நிரம்பவில்லை. எனவே தமிழக மக்களின் நலன் கருதி காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை ஏற்று கர்நாடக அரசு உடனே தண்ணீர் திறந்து விட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், ஞானசேகரன், விடியல் சேகர், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், இ.சி.சேகர், தலைமை நிலைய செயலாளர்கள் டி.என்.அசோகன், டி.எம்.பிரபாகர், ஜி.ஆர்.வெங்கடேஷ், நிர்வாகிகள் ஆர்.எஸ்.முத்து, சிவபால், சித்தர்ராஜ், ஆனந்தராஜீ, முனவர் பாட்ஷா, மகேஷ்வரி, அமுதா பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மா.கா. மாவட்ட பொதுச்செயலாளரும், மயிலை பெரியசாமியின் மகனுமான மயிலை சந்திரசேகர் நன்றி கூறினார்.8c56d53c-9e81-430b-b89e-8f86c71a7627_S_secvpf