தமிழகத்தில் 2016 சட்ட மன்ற தேர்தலுக்கு எல்லா கட்சிகளுமே தயாராகி வருகின்றன. வாக்காளர்களை கவருவதில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு விதமான வியூகங்களை வகுத்து பணியாற்றி வருகின்றன.
த.மா.கா. தொடங்கிய பிறகு முதல் முறையாக வருகிற சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. கட்சியின் செல்வாக்கை அனைத்து பகுதிகளிலும் வளர்த்து வாக்கு வங்கியை உருவாக்க ஜி.கே.வாசன் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் இரண்டு கட்டங்களாக சுற்றுப்பயணம் செல்கிறார். தற்போது முதல் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதுவரை 50 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று விட்டார்.
21–ந்தேதி விருதுநகரிலும், 22–ந்தேதி சிவகங்கையிலும் சுற்றுப்பயணம் செய்கிறார். முதல்கட்ட சுற்றுப் பயணத்தை டிசம்பர் முதல் வாரம் நிறைவு செய்கிறார்.
தனது சுற்றுப்பயணத்தின் போது பொதுக்கூட்டம் பேசுவது மட்டுமல்லாமல் கிராம மக்களுடன் உரையாடு வதை முக்கிய நிகழ்வாக வைத்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நெற்சோழப்பட்டி கிராமத்தில் தரையில் பாயில் அமர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள், விவசாயத்துக்கு அரசு என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.
இதே போல் ஒவ்வொரு பகுதியிலும் அந்த அந்த பகுதி நெசவாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் என்று அனைத்து தரப்பு மக்களின் பிரச்சினைகளை அவர்களுடன் பேசி அறிந்து வருகிறார்.
ஆரணியில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தின் போது அங்குள்ள ஒரு கோவில் வாசலில் அமர்ந்து நெசவாளர்களுடன் பேசினார்.
இப்படி தனது பிரசாரத்தின் போது அந்த அந்த பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகளை விளக்கி பேசுகிறார். பகல் நேர சுற்றுப்பயணத்தில் கிராமத்து திண்ணைகளில் அமர்ந்து கிராம மக்களுடன் உரையாடி அவர்களின் வாழ்க்கை நிலைமை, சந்திக்கும் பிரச்சினைகளை அறிகிறார். இதனால் கிராமங்களில் மக்களை கவர்ந்து வருகிறார்.
