ஐயா ஜி.கே.வாசன் கோரிக்கை
த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:–
மத்திய பா.ஜ.க அரசும், தமிழக அரசும் மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு மானியத்தை உயர்த்தி வழங்கிட வேண்டும்.
மத்திய பா.ஜ.க அரசு மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் சிரமமின்றி நடைபெற அவர்களுக்கு மானியங்கள் கொடுக்க வேண்டும்.
மத்திய அரசு மீனவர்களுக்கு வழங்கிய டீசல் எண்ணெய் மீதான கலால் வரியை நீக்கி அவர்களுக்கு மானியமாக கொடுத்த தொகையை நிறுத்தியிருக்கிறது.
10-வது 5 ஆண்டுத் திட்டத்திற்கு முன்பு வரை பதிவு செய்யப்பட்ட மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்களுக்கு டீசல் எண்ணெய் மீதான மத்திய கலால் வரியினை மத்திய அரசு மீனவர்களுக்கு திருப்பி வழங்கி வந்தது.
மீனவர்களுக்கு டீசல் எண்ணெய் மீதான மத்திய கலால் தொகையினை திருப்பி அளித்த திட்டமானது 100 சதவீதம் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் 11–வது 5 ஆண்டுத் திட்டத்தில் மத்திய அரசின் இத்திட்டத்தில் பயனடைய வேண்டுமென்றால் விசைப்படகு உரிமையாளர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டால் அதில் எந்த விசைப்படகு உரிமையாளர்களும் இருக்க மாட்டார்கள்.
காரணம் கட்டு மரம், வலை வைத்து மீன்பிடிப்பவர்களின் விசைப்படகின் விலை குறைந்த பட்சமே ரூ.3 லட்சம் மதிப்பு ஆகும்.
எனவே மத்திய அரசின் இத்திட்டத்தின்படி வறுமைக் கோட்டிற்கு கீழ் என்ற ஆணையானது மீனவர்களுக்கு பயன்படாது.
மேலும் மீனவர்கள் தங்கள் மீன்பிடித் தொழில் மூலம் மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுத் தருகிறார்கள்.
எனவே மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்க மத்திய அரசு வறுமைக் கோட்டின் கீழ் என்ற ஆணையை நீக்கி, மீனவர்களுக்கு டீசல் மானியம் முழுமையாக, தவறாமல் வழங்கிட வேண்டும்.
தமிழகத்தில் மீனவர்களுக்கு தமிழக அரசு ஏற்கனவே வழங்கி வந்த டீசல் மானியத்தை உயர்த்தி தர வேண்டும்.
மீனவர்கள் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் சென்று மீன்பிடிப்பதற்கு இன்றையப் பொருளாதார ஏற்றத்தைக் கணக்கில் கொண்டும், அவர்களது மீன்பிடித் தொழில் சிரமமின்றி தொடரவும் டீசல் மானியத்தை குறைந்த பட்சம் மாதத்திற்கு 3 ஆயிரம் லிட்டர் கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
ஏனென்றால் மீனவர்கள் அண்மைக் கடலில் மீன்கள் கிடைக்காத நேரங்களில் ஆழ்கடல் பகுதிக்குச் சென்று மீன்பிடிக்கச் செல்லும்போது பல நாட்கள் தங்கி மீன் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
அப்பொழுது அவர்களது படகுகளுக்கு அதிக அளவில் எரிபொருள் தேவைப்படுகிறது. எனவே தற்பொழுது மாதத்திற்கு வழங்கப்பட்டு வரும் ஆயிரத்து 500 லிட்டர் டீசல் என்பதை 3 ஆயிரம் லிட்டராக உயர்த்தி அவர்களது மீன்பிடிக்கும் தொழிலுக்கு தமிழக அரசு உதவிட வேண்டும்.
மேலும் தமிழக அரசு அனைத்து மீன்பிடி விசைப்படகு உரிமையாளர்கள் பயன்பெறும் வகையில் மத்திய கலால் வரியை தொடர்ந்து மானியமாக மத்திய அரசு வழங்கிட வலியுறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
