சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்து பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் பயன்படுத்தப்படும் பட்டாசுக்கு சிவகாசிப் பகுதியில் இருந்து தான் 90 சதவீத பட்டாசுகள் கொண்டு செல்லப்படுகிறது. இப்பட்டாசுத் தொழிலை நம்பி சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். இச்சூழலில் பட்டாசு வெடிக்க தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்ற போது மத்திய அரசு 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனவே, இதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு செயல்பட தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து பட்டாசுத் தொழிலை காப்பாற்ற வேண்டும். மேலும் மத்திய அரசும் உடனடியாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து பட்டாசுத் தொழிலை காப்பாற்றி, உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் காக்க வேண்டும்
