வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்: வாசன்

தமிழகத்துக்கு வறட்சி நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். எனவே, தமிழக அரசு தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தது.

மேலும் தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக 39,525 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இந்நிலையில் மத்தியக் குழு தமிழகத்தில் நிலவும் வறட்சி குறித்து கள ஆய்வு செய்ய வருகிறது.

தமிழக அரசு – அரசு அதிகாரிகளோடு, அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கொண்ட குழுவையும் மத்தியக் குழுவோடு ஆய்வு செய்ய அனுப்பி வைக்க வேண்டும். இவர்கள் டெல்டா மாவட்டப் பகுதிகள் உட்பட அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் மத்தியக்குழு வறட்சி குறித்து தமிழக அரசிடம் ஆலோசனை செய்வதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கப் பிரதிநிதிகள், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.

இந்த முழுமையான, சரியான ஆய்வறிக்கையை தமிழக அரசின் ஒப்புதலோடு மத்தியக் குழு மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நிவாரணத் தொகையை தமிழகத்துக்கு வழங்கிட வேண்டும்.

ஏற்கெனவே வார்தா புயல் தமிழகத்தை பாதித்தபோது அதனை ஆய்வு செய்ய மத்தியக் குழு கால தாமதமாக தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்தது. மேலும் மத்தியக் குழு அந்த ஆய்வின் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பித்த பிறகு புயல் பாதிப்பிற்கான நிவாரணத் தொகையை மத்திய அரசு இன்னும் முழுமையாக வழங்கவில்லை. இதனை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

தற்போது வறட்சி குறித்து ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு அளிக்கும் ஆய்வறிக்கையின் உண்மை நிலைக்கு ஏற்ப உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் நிலவும் வறட்சியால் விவசாயத் தொழில் நலிவடைந்திருக்கிறது. இதன் காரணமாக மனம் உடைந்தும், அதிர்ச்சிக்குள்ளாகியும் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள். இவ்வாறு உயிரிழந்த அனைத்து விவசாயிகளையும் சரியாக கணக்கிட்டு அவர்களின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக, உடனடியாக வழங்க வேண்டும்.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான அனைத்துவிதமான விவசாயக்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *