ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைதானவர்களை விடுதலை செய்க: வாசன்

ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மாடுபிடி வீரர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை நடத்திட அறவழியில் போராடி வருகிறார்கள்.

குறிப்பாக நேற்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு, பிற இடங்களில் மஞ்சு விரட்டு போட்டியை நடத்த முயன்ற மாடுபிடி வீரர்கள், ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பொது மக்கள் ஆகியோர் மீது காவல்துறை தடியடி நடத்தி, கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களுக்கு குடிநீர், உணவு வழங்கியவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்திருப்பது மனிதாபிமானமற்ற செயல். தமிழக மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக உணர்வுபூர்வமான போராட்டங்களில் ஈடுபட்ட போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் கண்மூடித்தனமானது. மத்திய, மாநில அரசுகள் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

எனவே தமிழக அரசு ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சு விரட்டு போட்டி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

மேலும் மத்திய, மாநில அரசுகள் இந்த தை மாதம் முடிவதற்குள் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெறுவதற்கு தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *