பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டக்கூடாது: ஜி.கே.வாசன் அறிக்கை

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைக் கட்டும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசும் கேரள அரசை கண்டித்து இம்முயற்சியை கைவிட வலியுறுத்த வேண்டும்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைக் கட்டும் பணிகளை தொடங்கியுள்ளது. இது கேரள அரசின் நியாயமற்ற செயலாகும்.

காரணம் பவானி ஆற்றின் தண்ணீர் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயம் நடைபெறுவதோடு, பொது மக்களின் குடிநீருக்காகவும் பயன்படுகிறது.

குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி வாழ் மக்கள் பவானி ஆற்று தண்ணீரை நம்பித் தான் வாழ்கிறார்கள். இச்சூழலில் பவானி ஆற்றின் குறுக்கே கோவைக்கு அருகே உள்ள தேக்குவட்டை என்ற இடத்தில் கேரள அரசு தடுப்பணைக் கட்டும் பணிகளை மேற் கொண்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.

கேரள அரசின் இத்தகைய நடவடிக்கை தமிழக அரசுக்கு தெரியுமா, தடுப் பணைக்கட்டுவதற்காக காவிரி நடுவர் மன்றத்திடம் அனுமதி பெற்றார்களா என்பதை தமிழக அரசு தெளிவுப்படுத்த வேண்டும். எப்படி இருப்பினும் உடனடியாக தமிழக அரசு கேரள அரசின் இம்முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும்.

மேலும் மத்திய அரசும் கேரள அரசின் இச்செயலைக் கண்டிப்பதோடு, தடுப்பணைக் கட்டக்கூடாது என்பதை உறுதிப்பட தெரிவிக்க வேண்டும்.

இவ்வாவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *