பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கேற்ப பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைப்பதில்லை. அதாவது கச்சா எண்ணெய் விலை கடும் சரிவைச் சந்தித்த போது கூட பெட்ரோல், டீசல் விலையை உடனடியாகக் குறைக்காமல் பலகோடி ரூபாய் லாபம் பார்த்துவிட்டு பிறகு பெட்ரோல், டீசல் விலையை சொற்ப அளவிலேயே குறைத்தது,
ஆனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உடனடியாக உயர்த்துவதும் வாடிக்கையாகி விட்டது.
மத்திய அரசும் இதனைக் கண்டு கொள்வதில்லை. இது பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கையே காட்டுகிறது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. எனவே எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட் ரோல் டீசல் விலையினை மாற்றி அமைக்கின்றதன. மத்திய அரசும் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி வருகிறது.
இதுபோன்ற தவறான கொள்கைகளினால் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து பொது மக்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே, மத்திய அரசு கலால் வரியை ரத்து செய்து, விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை எண்ணெய் நிறுவனங்களிடம் வழங்காமல், பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல், டீசல் விலை மீது ஒரு நிலைத்த தன்மையை ஏற்படுத்த வேண்டும்.
இந்த விலை உயர்வினால் சரக்குக் கட்டணம் உயந்து, விலைவாசி மேலும் உயர்கிறது. ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
எனவே மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
