தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை:கேரள மாநிலத்தின் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலத்தின் பெங்களூருக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை கொண்டுசெல்ல தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 7 மாவட்ட விவசாய நிலங்களின் வழியாக எரிவாயு குழாய்கள் அமைக்க கெயில் நிறுவனம் முடிவெடுத்தது. இப்பகுதி விவசாய நிலங்களின் வழியாக சுமார் 310 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 20 மீட்டர் அகலத்திற்கு எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டால் விளைநிலங்கள் பெரிதளவில் பாதிக்கப்படும். இதனால் வரும் காலங்களில் 7 மாவட்டங்களைச் சார்ந்துள்ள சுமார் 2 ஆயிரத்து 500 விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தொழிலை இழக்க நேரிடும்.
இதுதொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. எனவே மத்திய அரசு தமிழக விவசாயிகளின் முக்கியப் பிரச்னையாக இருக்கும் இந்தத் திட்டத்தினை மாற்று வழிப்பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்காக கெயில் நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தியும், சட்டத்திற்கு உட்பட்டும், நீதிமன்ற உத்தரவைப் பெற்றும் எரிவாயு குழாய் பதிப்பதற்கு மாற்று வழிப்பாதையை ஏற்படுத்தி, இத்திட்டத்தினை நிறைவேற்றிட மத்திய அரசு முன்வர வேண்டும். தமிழக அரசு இதற்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நலன் காத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. – See more at: http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=89257#sthash.y3UFrt8y.dpuf
