ராமநாதபுரம்:”வாகன சோதனையில் போலீசாரின் கெடுபிடியை தவிர்க்க வேண்டும்,” என த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுரை -தனுஷ்கோடி நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியில் நான்கு வழிச்சாலை அமைக்க வேண்டும். தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற அனைத்து கட்சிகளும் உடன்பட வேண்டும்.
சட்டசபை தேர்தல் நியாயமாக, அமைதியாக நடக்க தேர்தல் கமிஷனின் உறுதியான நடவடிக்கை தொடர வேண்டும். வியாபாரம், மருத்துவமனை, திருமண செலவுகளுக்கு பணம் கொண்டு செல்வோரை வாகன சோதனையில் போலீசார் கெடுபிடி செய்வதை தளர்த்த வேண்டும்.
வெற்றிக்கூட்டணியாக அமைய வேண்டும் என்பதால் ஒரு சில கட்சிகள் கூட்டணி குறித்து இறுதி முடிவெடுக்கவில்லை. த.மா.கா., சுற்றுப்பயணத்திற்கு அனைத்து தரப்பினரின் ஆதரவு பெருகி வருகிறது. ஏழை, நடுத்தர, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளோரின் முன்னேற்றத்தை முன்னிறுத்தி பிரசாரம் அமையும். மாநில கட்சியான த.மா.கா., கூட்டணி மக்களின் மனநிலைக்கு ஏற்ப அமையும்.
தனித்து போட்டியிடும் எண்ணமில்லை. கருத்து கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பை நம்ப தயாராக இல்லை. வாக்குச்சீட்டில் உண்மையான கருத்து கணிப்பு தெரியவரும். கூட்டணி எப்படி வேண்டுமானாலும் அமையலாம், என்றார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.-
