இது தொடர்பாக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
” தற்போது தினந்தோறும் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதை வாங்குவதற்கு தயங்குகிறார்கள். மேலும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது ஏழை, எளிய மக்கள் வெங்காயம் வாங்குவதை தவிர்க்கிறார்கள். மக்கள் தங்களின் உணவிற்கு தேவைப்படும் அத்தியாவசியப் பொருளை வாங்குவதற்கு முடியாத சூழல் உருவாகாமல் இருப்பதற்கு அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு முன் வர வேண்டும். மேலும் அதனை இருப்பில் வைப்பதற்கான உச்ச வரம்பை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயத்தை முதலில் நம் நாட்டின் தேவைக்கு பூர்த்தி செய்த பிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் அரசு கவனிப்போடு செயல்பட வேண்டும்.
நம் நாட்டிற்கு வெங்காயம் பற்றாக்குறை என்று கூறி அதற்காக பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்போது அதன் விலை குறைவு என்றாலும் அதன் தரம் குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. நாட்டில் மழை குறைவினாலும், இயற்கைச் சீற்றத்தாலும், பதுக்குவதினாலும் உணவுப்பொருட்களுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே மத்திய, மாநில அரசுகள் மக்களின் அடிப்படைத் தேவையான உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் விவசாய விளைப்பொருட்கள் நியாயமான விலையில், தேவையான அளவில் மக்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கைகளை எடுத்து மக்கள் நலன் காக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
