திருச்சி, நவ. 20
திருச்சியில் வருகிற 28–ந் தேதி நடைபெற உள்ள வாசன் புதிய கட்சி தொடக்க விழா பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு கால்கோல் நாட்டும் விழா இன்று காலை பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்தது.
ஜி.கே.வாசன் கால்கோல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
இன்று எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது. கட்சி தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கு கால்கோல் நாட்டும் விழாவும், அதே போன்று கடந்த 3½ வருடங்களாக இலங்கை சிறையில் பொய் வழக்குகளால் சிறைபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்கள் அனைவரின் முயற்சி காரணமாக விடுதலை பெற்று வீடு திரும்ப உள்ளனர்.
நாங்கள் இயக்கம் தொடங்கிய 48 மணி நேரத்திலேயே 5 மீனவர்களும் விடுதலை பெற வேண்டும் என்று கூறி முதல் நிகழ்ச்சியாக 5 மீனவ குடும்பங்களையும் சந்தித்து ஆறுதல் கூறியதோடு 5 பேரும் வீடு திரும்ப முயற்சி எடுத்தோம். அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுத்ததால் அவர்கள் வீடு திரும்ப உள்ளனர். இனிமேல் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கும், அவர்கள் வாழ்வாதாரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சியில் 28–ந்தேதி நடைபெறும் பொதுக்கூட்டம் வருங்கால தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் அடித்தளமாக அமையும். தமிழக அரசியல் வரலாற்றில் திருப்பு முனையை ஏற்படுத்தும்.
காமராஜர் ஆட்சியை ஜி.கே.மூப்பனார் ஆசியோடு அமைப்போம். அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறவர்கள் நாங்கள் இயக்கம் தொடங்கிய முதலே ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு மெஜாரிட்டியான ஆதரவு உள்ளது.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரசிற்கு தான் ஆதரவு உள்ளது என்றும், வாசன் பிரிந்து சென்றதால் எங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் சொல்வதற்கு 28–ந் தேதி நடைபெறும் பொதுக் கூட்டம் மூலம் பதில் அளிப்போம். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுவதெற்க்கெல்லாம் நாங்கள் பதில் பேச விரும்பவில்லை. எங்களுக்கு பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பதிலேயே 24 மணி நேரமும் போதவில்லை.
எங்கள் பொதுக்கூட்டத்திற்கு போட்டியாக அவர்கள் கூட்டம் நடத்துவோம் என்று கூறுவதால் கவலை இல்லை. தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் போலீஸ் அனுமதி பெற்று கூட்டம் நடத்தலாம்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ வருடங்கள் இருக்கிறது. அதற்குள் தமிழகத்தில் பலம் வாய்ந்த இயக்கமாக எங்களது இயக்கத்தை உருவாக்க கிராமங்கள் முதல் நகரங்கள் வரை எங்கள் நிர்வாகிகள், தொண்டர்கள் மக்களை சந்தித்து அந்தந்த பகுதி குறைகளை கேட்டு அறிந்து பிரச்சனைகளை தீர்க்கும் இயக்கமாக செயல்படுவோம்.
தேர்தலின் போது மக்கள் விரும்பும் இயக்கமாக செயல்படும் வகையில் எங்கள் பணி தொடரும். இயக்கத்தின் கொடி, சின்னம் அறிவிக்கும் முன்பே சிறு சிறு கட்சிகள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் எங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலை புலிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்களுடன் எங்களுக்கு ஒத்தகருத்து கிடையாது. வருங்காலத்திலும் ஆதரவு கிடையாது.
கர்நாடகத்தில் புதிதாக 2 அணைகளை கட்ட கர்நாடக அரசு நடவடிக்கை எடுப்பது தவறானது. உச்ச நீதிமன்றத்தை மதித்து செயல்பட வேண்டும். இது தொடர்பாக 22–ந்தேதி காவிரி விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் எங்கள் இயக்கத்தினர்கள் கலந்து கொள்வார்கள்.
தமிழகத்தில் பால் விலை, மின்கட்டணம் விலை ஏற்றம், பொதுமக்களை பாதித்து உள்ளது. ஏழை மக்களை பாதுகாக்கும் வண்ணம் அரசு செயல்பட வேண்டும். தர்மபுரியில் 12 குழந்தைகள் இறந்ததற்கு தாய்களை குறை சொல்வதில் நியாயம் இல்லை. தர்மபுரியில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இது போன்று இறப்புகள் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் எம்.எல்.ஏக்கள் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ராஜசேகரன், என்.எஸ்.வி.சித்தன், முன்னாள் திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
Courtesy: Maalaimalar

His message to his Critics is a caution…
His action is his explanation…
28th Nov’14 conference is his direction….
He is none other than our Vasan