வேதாரண்யம் பகுதியில் வடிகால்களை தூர்வாரி, பராமரிக்க அரசு சிறப்புத் திட்டத்தை உருவாக்கவேண்டும் என தமாகா தலைவர்
ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.
வேதாரண்யத்தை அடுத்த தகட்டூர் பகுதியில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளையும், பயிர்களையும் ஜி.கே.வாசன் திங்கள்கிழமை பார்வையிட்டார்.
பெத்தாச்சிக்காடு கிராமத்தில் பயிர் பாதிப்புகளை பார்வையிட்ட அவர், விவசாயிகளிடம் பாதிப்பின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தகட்டூர் பகுதியில் செல்லும் முக்கிய வடிகாலான மாணங்கொண்டான் ஆறு, முள்ளியாறு முறையாக தூர்வாரப்படாத நிலையில், வெங்காயத் தாமரைகள் வளர்ந்த காரணத்தால்தான் பயிர் பாதிப்பு ஏற்பட்டு, தற்போதுவரை தண்ணீர் வடியவில்லை. இங்குள்ள நொச்சிக்கோட்டகம் ஏரியை முறையாக தூர்வாரினால் வெள்ளம் எளிதாக வடிவதோடு, மழை நீரையும் சேமிக்கமுடியும். எனவே, இதனை அரசு பரிசீலிக்கவேண்டும்.
கழிமுகப் பகுதியில் உப்பு நீரை தடுக்கவும், வெள்ள நீர் வடியவும் தடுப்பணை கட்ட வேண்டும். மழை பாதிப்பால் நெற்பயிர்கள் 50 சதவீதம் மகசூல் இழப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு நிவாரணம் வழங்கவேண்டும் என்றார்.
அப்போது, கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார், பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ ரெங்கராசன், நாகை தெற்கு மாவட்டத் தலைவர் பி.வி.கே.பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
