ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க அவசரம் காட்டக் கூடாது: வாசன்

ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நாடு முழுவதும் மார்ச் 1, 2017 முதல் ரேஷன் கடைகளில் மின்னணு பரிவர்த்தனை அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது இத்தகைய குறிப்பிட்ட காலத்திற்குள் சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே.

குறிப்பாக மின்னணு பரிவர்த்தனை குறித்து நாடு முழுவதும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மின்னணு பரிவர்த்தனையை தெளிவுபடுத்தி, பயன்பாட்டுக்கு கொண்டுவர கால அவகாசம் தேவை.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி அன்று பாரத பிரதமர் திடீரென்று 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை வெளியிட்டார். முன்னேற்பாடில்லாத, அவசர நடவடிக்கையால் நாடு முழுவதும் இன்று வரை அனைத்து தரப்பினரும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால் நாட்டில் ஒரு அசாதாரண சூழல் தான் தொடர்ந்து இன்றுவரை நிலவுகிறது. குறிப்பாக சாதாரண மக்கள் மீது அதிக சுமையை ஏற்றியிருக்கிறார்கள்.

தற்போது மத்திய அரசு ரேஷன் கடைகளில் மார்ச் – 1, 2017 முதல் மின்னணு பரிவர்த்தனை செயல்படுத்தப்படும் என்று அறிவித்திருப்பதால், இத்திட்டம் இத்தகைய குறைவான காலத்திற்குள் முறையாக, முழுமை பெறுமா என்ற பெருத்த சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே பொதுமக்கள் பணத் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கிற இச்சூழலில் மின்னணு பரிவர்த்தனைகளை திணிக்க மத்திய அரசு அவசரம் காட்டக் கூடாது.

முக்கியமாக மத்திய அரசு பணத் தட்டுப்பாட்டுப் பிரச்சினையையும், சில்லறைப் பிரச்சினையையும் தீர்க்கக் கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். அதன் பிறகே இந்த மின்னணு பரிவர்த்தனை முறையை கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

மேலும் மின்னணு பரிவர்த்தனையை கட்டாயமாக்கும் முன்பு தேவையான முன்னேற்பாடுகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவான செயல்திட்டங்களை வகுத்து, முறைப்படுத்திய பிறகே நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.

எனவே மத்திய அரசு – ரேஷன் கடைகளில் மார்ச் 1, 2017 முதல் மின்னணு பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்படும் என்று அறிவித்த கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க முன்வர வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *