மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கும்பகோணம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

பேட்டி

த.மா.கா.பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று தஞ்சை மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கும்பகோணத்தில் வருகிற பிப்ரவரி மாதம் மகாமக விழா நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் சார்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் மெதுவாக நடக்கின்றன.

மகாமகத்தை முன்னிட்டு தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை வரை உள்ள ரெயில் நிலையங்களில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9 கோடி ஒதுக்கியிருப்பதாக ரெயில்வே துறை அறிவித்துள்ளது. அந்த பணிகளும் மந்தமாகவே நடக்கின்றன. மகாமக விழாவில் கலந்து கொள்வதற்காக வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவர்கள் வந்து செல்வதற்கான தொலை தூர சிறப்பு ரெயில்கள் குறித்து ரெயில்வேதுறை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

மேம்பாலம்

கும்பகோணத்தில் உள்ள மாதுளம்பேட்டை, மாத்தி, தாராசுரம் ரெயில்வே கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும். கும்பகோணத்தை பாரம்பரியம் மிக்க நகரமாகவும், ஸ்மார்ட் சிட்டியாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். டெல்டா மாவட்டங்களில் உள்ள ஆறுகள், குளங்கள், ஏரிகள், வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரவேண்டும்.

ஏழை-எளிய மக்களுக்கு வழங்கப்படும் மண்எண்ணெய் மானியத்தை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்த அறிவிப்பை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். கொப்பரை தேங்காய் ஆதார விலை ஒரு கிலோவிற்கு ரூ.150 என நிர்ணயிக்க வேண்டும்.

நிவாரணம்

சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் பயிர் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையை பொங்கலுக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழைக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்களில் பணியாற்றி வந்த 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு

மக்கள் நல கூட்டணியில் த.மா.கா.சேர வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனது சுற்றுப்பயணம் பிப்ரவரி இறுதி வரை உள்ளது. கூட்டணி குறித்து த.மா.கா. தலைவர் கள், பொறுப்பாளர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து தக்க நேரத்தில் முடிவை அறிவிப்பேன். தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாமகத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய ரெயில்வே பணிகள் குறித்து த.மா.கா. தயாரித்துள்ள மனுவை மத்திய ரெயில்வே மந்திரியை சந்தித்து கொடுக்க உள்ளேன். அப்போது வெளியுறவுத்துறை மந்திரியை சந்தித்து இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களுடையை படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது த.மா.கா. மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார், சுரேஷ்மூப்பனார், சந்திரசேகரமூப்பனார், மாவட்ட தலைவர்கள் ராம்குமார், ரெங்கராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் இருந்தனர்.  201601040138499198_Affected-by-floodsDelta-farmersTo-provide-relief_SECVPF

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *