மத்திய, மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் கரும்புக்கான ஆதாரவிலையை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஆலைகளிடமிருந்து உடனடியாக பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மத்திய, மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நலன் காத்திடும் வகையில் கரும்புக்கான ஆதாரவிலையை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிடவும், விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை ஆலைகளிடமிருந்து உடனடியாக பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரும்புக்கான ஆதாரவிலை போக்குவரத்து கட்டணம் உட்பட டன்னுக்கு 2 ஆயிரத்து 850 ரூபாய் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு கரும்புக்கான ஆதாரவிலையை 50 சதவீதமாவது உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அரசு வழங்குவதாக அறிவித்த ஆதாரவிலை 10 சதவீதத்திற்கும் குறைவானதாகவே உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் கரும்பு பயிர் செய்து, அறுவடை செய்து, அதனை சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வரை ஆகும் மொத்த செலவைக் கணக்கிட்டால் அவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படுகிறது.

குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயிகள் பயிர் செய்யும் போது வறட்சி, மழை வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தினாலும், மின் தட்டுப்பாடு, உரம் மற்றும் இடுபொருட்கள் விலை உயர்வு, வெட்டுக்கூலி உயர்வு, வேலையாள் பற்றாக்குறை, உரிய பருவத்தில் கரும்புகளை ஆலைகள் வெட்டிக்கொள்ளாமல் இருப்பது, போக்குவரத்துக்கு ஆகும் கூடுதல் செலவு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயம் பாதிக்கப்பட்டு, விவசாயிகள் கடன் சுமையால் வாடிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் கடந்த 2 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய சுமார் 800 கோடிக்கும் மேல் உள்ள நிலுவைத் தொகை இன்னும் வழங்கப்படாமல் இருப்பதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உட்படுகிறார்கள்.
ஏற்கனவே கரும்பு விவசாயிகள் கரும்புக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், தங்களுக்கு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள்.
எனவே மத்திய, மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து ஒரு டன் கரும்புக்கு 4 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். தமிழக அரசு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடத்தி கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகத்திடம் இருந்து உடனடியாக பெற்றுத்தர வேண்டும். கரும்பு விவசாயிகளின் நலன் காத்திட வேண்டியது அரசின் கடமை.
G.K வாசன்
தலைவர்
தமிழ் மாநில காங்கிரஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *