மது இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய கொள்கை.
அதனை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டார்கள்.
மேலும் இதனை பல கூட்டங்களில் தீர்மானமாக நிறைவேற்றி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
தமிழக மக்களும், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளும் பூரண மதுவிலக்கு கொள்கையை தமிழகத்தில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க. மது விலக்கு சம்பந்தமாக கூறியிருக்கும் கருத்து என்பது இந்த கொள்கைக்கு ஒத்தக்கருத்தாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் கோரிக்கையை கவனத்தில் கொண்டும் தமிழக ஆட்சியாளர்கள் பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த அனைத்து முழு முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இதுவே தமிழகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்.
