புத்தாண்டு தினமான இன்று மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கூட்டணிக்கு அழைப்பு விடுப்பார்கள் என்று தெரிகிறது.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இன்று புத்தாண்டை கொண்டாடினார். தொண்டர்கள் மத்தியில் கேக் வெட்டி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் நீண்ட வரிசையில் நின்று அவருக்கு சால்வைகள் அணிவித்தனர். சைதை மனோகரன் ஏற்பாட்டில் ஜி.கே.வாசனுக்கு ரூபாய் நோட்டு மாலை அணி விக்கப்பட்டது.
காலம் – மாற்றத்தை நிர்ணயிக்கும் என்ற வாசகத்துடன் கெடிகாரம் மயிலாப்பூர் தொகுதியில் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்படுகிறது. இதனை மயிலை சத்யா ஏற்பாடு செய்து இருக்கும் இந்த நிகழ்ச்சியை ஜி.கே.வாசன் தொடங்கி வைத்தார்.
பின்னர் ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:–
தமிழ்நாட்டில் தொடர்ந்து மக்கள் பணியையும், இயக்கப் பணியையும் இரு கண்களாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். மழை வெள்ள பாதிப்பின்போது மனித நேயத்துடன் பணியாற்றி முதல் நிலை கட்சியாக விளங்கினோம். தேர்தல் நெருங்கி வருகிறது. புத்தாண்டில் புதிய மாற்றம் ஏற்படும். அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் வெளிப்படுத்தும் வகையில் முதல் வரிசை கட்சியாக இருப்போம்.
எல்லா கட்சிகளும் இப்போது அறிவித்து வருவது அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்புகள்தான். தேர்தல் நெருங்கும் போதுதான் கூட்டணிகள் உறுதியாகும். நிச்சயமாக நாங்களும் மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியில் இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், கோவை தங்கம், விடியல் சேகர், ஞானசேகரன், என்.டி.எஸ். சார்லஸ், விக்டரி மோகன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், இ.சி.சேகர், தாம்பரம் மணி, ராஜ்குமார், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம்.பிரபாகரன், டி.என். அசோகன் மற்றும் நிர்வாகிகள் கிண்டி மம்மு, கத்தி பாரா ஜனார்த்தனம், ஜி.எம். ஏழுமலை,
பூந்தமல்லி ஜெயக்குமார், உமா, மயிலை தரணி, சீனிவாசன், அசோகன், ஜெ.ராகவன், கோவில் பாஸ்கர், செல்வகுமார், தளபதி சிவா, கஜபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
