போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னைகளை தீர்க்க வேண்டும்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள். இவர்களுக்கு 01.09.2013–ம் ஆண்டு முதல் ஊதிய ஒப்பந்தம் போடப்படாமல் இருந்தது.

இது குறித்து போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 13.04.2015 அன்று ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையில் 20 சதவீதத் தொகையை போக்குவரத்துகழகங்கள் வழங்கியுள்ளன.

ஆனால் ஒப்பந்தப்படி கொடுக்க வேண்டிய மீதமுள்ள 80 சதவீதத் தொகையை இது வரை கொடுக்கவில்லை. மேலும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி கடன் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களில் வழங்கப்படவில்லை.

பணி ஓய்வு பெறுகின்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கான காசோலையை உடனடியாக வங்கிகளில் மாற்றிக் கொள்ளும் வகையிலும் வழங்கப்படுவதில்லை.

பணி ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2012 ஆம் ஆண்டிற்கு பிறகு வருங்கால வைப்பு நிதியைத் தவிர பிற பணப் பலன்கள் இன்று வரை வழங்கப்படாமல் உள்ளன.

போக்குவரத்து கழகங்களில் 240 நாட்கள் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற அரசின் ஆணை இருக்கின்ற போது, 540 நாட்களுக்கும் மேல் பணிபுரிந்து கொண்டிருக்கும் தொழிலாளர்களை இன்னும் பணிநிரந்தம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.

எனவே அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பணி நிரந்தரம், பணப்பலன், வருங்கால வைப்புநிதி, கடன் உள்ளிட்ட அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்றிட முன்வர வேண்டும் என  இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.