தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் முன்னாள் பணியாளர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 70 ஆயிரம் ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 2012-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை ஓய்வு பெற்ற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்படவில்லை.
போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்தம், பணப் பயன்கள், பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள், ஊழியர்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வந்தனர்.
பல சமயங்களில் அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாமல் நிலுவையில் உள்ளது. இவை அனைத்தையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
பொங்கல் பண்டிகையையொட்டி, போக்குவரத்துக் கழக தொழிளாலர்களின் நலன் கருதி ஓய்வூதியம், சம்பளம், சலுகைகளை வழங்குவதுடன் பிற கோரிக்கைகளும் காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
