பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பாடம்: வாசன்

சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் அசாதாரண சூழலுக்கும், ஆட்சியின் நிலையற்ற தன்மைக்கும் தீர்வு காணப்படாமல் இருப்பதற்கு – முக்கிய காரணமாக கருதப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வெளிவந்திருக்கிறது.

கடந்த 21 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கு சம்பந்தமாக – இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.

வி.கே. சசிகலா உள்பட 3 பேருக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இறுதித்தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும் என்பது தான் உண்மை நிலை.

சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும்.

உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்புக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்பது தான் நீதி. சட்டத்தின் முன் அனைவரும் சமம்.

மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். தீர்ப்பும் வந்துவிட்டது.

எனவே தமிழக ஆளுநர் தற்போது தமிழகத்தில் நிலவும் நிலையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிலையான ஆட்சி ஏற்படவும் – அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உரிய முடிவு எடுத்து உடனடியாக, விரைவில், காலம் தாழ்த்தாமல் – ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வழி வகுக்க வேண்டும்” என்று வாசன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *