பாலாற்றில் குறுக்கே அணை கட்டியதை தமிழக பொதுப்பணித்துறை தடுக்க முயற்சிக்கவில்லை : ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் துணை அமைப்பு தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகித்தார். இதில், கட்சி வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர், ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

மவுலிவாக்கம் கட்டிட விபத்துக்கு காரணம் தமிழக அரசின் கண்காணிப்பு முறையாக இல்லை என்றுதான் ெசால்ல வேண்டும். இதில் வீடு வாங்கியவர்களின் பொருளாதார இழப்பை ஈடுசெய்ய தமிழகஅரசு ஒரு நல்ல நிலையை ஏற்படுத்த வேண்டும். அட்டப்பாடியில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு தடை விதித்தது போன்று நிலை, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டும்போது ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்கு தமிழக பொதுப்பணித்துறை முறையாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டுகிறேன்.

தமாகாவில் இருந்து வெளியே சென்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. அவர்கள் போனது எங்களுக்கு பலவீனம் கிடையாது, பலம்தான். அவர்கள் வெளியே சென்றதால்தான், தற்போது ஏராளமானவர்கள் தமாகாவுக்கு வந்துள்ளனர். வரும் 10ம் தேதி ஒரு கட்சியே தமாகாவுடன் இணைகிறது. அதைத் தொடர்ந்து பல கட்சிகளை சேர்ந்தவர்களும் வந்து இணைகின்றனர். இதற்கான விழா விரைவில் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன், மாநில கலைப்பிரிவு தலைவர் ஜெ.எஸ்.கே.சதீஷ்குமார், வெங்கடேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *