படகு விபத்தில் பலியான அனைவருக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாடு பகுதி கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். இது மிகவும் துரதிஷ்டவசமானது. மிகவும் வேதனைக்குரியது.
திருச்சி மற்றும் திருச்செந்தூர் பட்டுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சுமார் 40க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலாச்சென்றனர்.
இப்படகு மணப்பாடு அருகே வந்த போது கவிழ்ந்தது. இதனால் இப்படகில் இருந்த பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கினர். கடலில் மூழ்கி உயிரிழந்த 10 பேரில் சிறார்களும், பெண்களும் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்துக்குள்ளான படகில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச்சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
தங்களது சொந்த லாபத்திற்காக பராமரிப்பு இல்லாமல், அரசின் உரிமம் பெறாமல் படகில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் நபர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும். எனவே தமிழக காவல்துறை இப்படகின் உரிமையாளர் மற்றும் படகு ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் முறையான பராமரிப்புடனும், பாதுகாப்பு அம்சங்களுடனும் படகுகள் இயக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும். மேலும் படகு மற்றும் விசைப்படகுகளில் செல்லும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கடலோர காவல்படை ரோந்து மற்றும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
படகு விபத்தில் பலியான அனைவருக்கும் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் தீவிர, சிறப்பு சிகிச்சை அளித்திட வேண்டும்.
படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமாகா சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வாசன் கூறியுள்ளார்.
