நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு அவசரச் சட்டமாக கொண்டு வந்திருப்பதால் விவசாயிகள், சாலையோர சிறு விவசாயிகள் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் கடலூரில் புதன்கிழமை பேசினார்.
கடலூர் மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (மூப்பனார்) உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் நகர அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஏ.நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர்.ரகுபதி, ஏ.எஸ்.சந்திரசேகரன், ஞானச்சந்தர், மக்கின், ராமநாதன், ராம்ராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் பேசியது: கடந்த ஒரு மாதமாக 20 மாவட்டங்களுக்குச் சென்று மக்களையும், நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறேன். மக்கள் தமாகா மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இளைஞர்கள் அதிகம் உள்ள கட்சியாக தமாகா உள்ளது.
கட்சியினர் குக்கிராமம், கிராமம், வட்டார அளவிலான பிரச்னைகளை எடுத்து போராட வேண்டும்.
தமிழகத்தில் அதிமுக பதிவியேற்ற பின்பு பேருந்துக் கட்டணம், மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியதால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்படைந்துள்ளனர். புதிய தொழில்கள் தொடங்கப்படவில்லை. உரிய காலத்தில் விவசாய இடுபொருள்கள் வழங்கப்படாததால் வெளிச் சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. கரும்புக்கு டன்னுக்கு ரூ.3,500ம், நெல்லுக்கு கொடுத்த வாக்குறுதிப்படியும் விலை வழங்க வேண்டும்.
காவிரியில் கர்நாடக அரசு தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, காவிரி நடுவர்மன்ற ஆணையம், காவிரி மேலாண்மை குழுவை கூட்டி அந்த முடிவை தடுக்க வேண்டும். தமிழக அரசு இதற்கான முடிவை எடுக்க வேண்டும்.
பாஜக அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை அவசரச் சட்டமாக கொண்டு வந்திருப்பதால் விவசாயிகள், சாலையோர சிறு விவசாயிகள் அதிக பாதிப்பிற்குள்ளாவார்கள். இச்சட்டத்தில் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் நம்பிக்கையின் அடிப்படையில் தான் வாக்குகள் கிடைக்கும். எனவே, காமராஜரின் கொள்கை, மூப்பனாரின் வளமான தமிழகம், வலிமையான பாரதம் என்ற கொள்கைகளை வென்றெடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவசரச் சட்டம் என்பது தவிர்க்க முடியாத காரணத்தால் மட்டுமே கொண்டு வர வேண்டும். ஆனால், தற்போதைய பாஜக அரசின் செயல்பாட்டால் இது ஜனநாயக அரசா அல்லது அவசரச் சட்ட அரசா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
50 லட்சம் உறுப்பினர் சேர்க்கை என்ற திட்டத்தில் 48 நாள்களில் 32 லட்சம் உறுப்பினர் படிவங்களை வழங்கியுள்ளோம். பிப்ரவரி இறுதியில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்தவுடன் மார்ச்சில் இயக்கத்துக்கு முழு வடிவம் கிடைக்கும். தமிழ் புத்தாண்டு முதல் புது எழுச்சியுடன் செயல்படுவோம் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பீட்டர்அல்போன்ஸ், பி.எஸ்.ஞானதேசிகன், பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், கோவைத் தங்கம், ஞானசேகரன், விடியல்சேகர், மாவட்ட பார்வையாளர்கள் ராஜாங்கம், இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
